மணிப்பூர் மாநில கலவரம் மூலம் மிகப்பெரிய இன அழிப்பை பாஜ அரசு நடத்தி வருகிறது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மணிப்பூர் மாநில கலவரம் மூலம் பாஜ அரசு மிகப் பெரிய இன அழிப்பை நடத்தி வருகிறது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை வெளியில் வராமல் இருக்கிறது. அங்கு ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு நடப்பது முற்றிலும் மறைக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் மதவாத அரசியல் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மணிப்பூர் கலவரம் முன்னுதாரணமாக உள்ளது. 2017ம் ஆண்டு முதல் மதவாத அரசியலை பாஜ அங்கு முன்னெடுத்துள்ளது.

பெருவாரியான பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக ஒரு குழுவை அரசாங்கமே உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி மிகப் பெரிய இன அழிப்பை நடத்தி வருகிறது. 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இப்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்கள், ராணுவம் மற்றும் காவல் துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே, பொதுமக்களே தங்கள் கையில் ஆயுதங்களை ஏந்தி போராட தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருந்தாலும் மணிப்பூர் மக்களுக்காக ஆதரவு கரம் நீட்ட வேண்டியது நமது கடமை.

மக்களுக்குள் விரோதத்தை தூண்டி விட்டு ஒருவருக்கொருவர் கொல்லும் நிலையை கொண்டு வந்து விட்டார்கள். இதை எப்படி தீர்க்க போகிறார்கள் என்பது தான் உள்துறை அமைச்சருக்கு நாங்கள் வைக்கும் கேள்வி. மணிப்பூர் மாநில அரசே, மக்களுக்கு எதிராக இருப்பதால் ராணுவத்தையும், காவல் துறையையும் கூட மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. அங்கு நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அரசின் நிர்வாக திறன் இல்லாத காரணத்தால் அங்கு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெறும் என தெரிகிறது. மதவாத அரசியலை அவர்கள் முன்னெடுப்பதால் தான் அரசு அதை கண்டும், காணாமல் இருக்கின்றது. மோடி அரசு வளர்ச்சி பாதையில் இருந்து விலகி மதவாத அரசியலை மட்டுமே நம்பி இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்தது மைசூரு போலீஸ்..!!

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிப்பு