மணிப்பூர் கலவரம் தொடர்பாக I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர்!!

டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முறையிட உள்ளனர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையில், இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றிய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கக் கோரி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே I.N.D.I.A. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 எம்பிக்கள், கடந்த வாரம் மணிப்பூர் சென்று நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து பேசினர்.

இந்த நிலையில் மணிப்பூர் சென்ற அந்த எம்.பி.க்கள் குழு மற்றும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் தற்போது உள்ள நிலவரம் குறித்தும் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் குடியரசு தலைவரை சந்திக்க உள்ள நிலையில், நேற்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென குடியரசு தலைவர் முர்முவை நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மணிப்பூர் கலவரம் குறித்து அமித்ஷாவிடம் குடியரசு தலைவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Related posts

ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு