`மா’ சாகுபடியில் மலைக்க வைக்கும் லாபம்…

கோடைகாலம் துவங்கி விட்டது. இந்த சீசன்தான் மாங்கனிகளுக்கான சீசன். நகரம், கிராமம், குக்கிராமம் என பல்வேறு இடங்களில் மாம்பழங்களின் விற்பனை துவங்கி இருக்கிறது. மாம்பழங்களில் மல்கோவா, நீலம், இமாம்பசந்த் என பல ரகங்கள் இருக்கின்றன. இதில் சேலம் குண்டு, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ஆகிய 3 ரகங்களைத் தனது 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து நல்ல மகசூல் ஈட்டி வருகிறார் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் பெரமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன். பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வந்த இவர் மாங்கனியின் மகத்துவத்தை உணர்ந்து, மா சாகுபடியில் முழுதாக கவனம் குவித்திருக்கிறார். ஒரு காலைப்பொழுதில் தனது மாந்தோப்பில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெயராமனைச் சந்தித்தோம். மா சாகுபடி குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ எனக்கு சொந்த ஊரு சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி யூனியனுக்குட்பட்ட பெரமனூர்தான். நாங்க பூர்வீகமாகவே விவசாய குடும்பம்தான். பி.ஏ வரை படித்திருக்கிறேன். பள்ளி செல்லும் காலத்திலேயே அப்பா, தாத்தா விவசாயம் செய்யும்போது உதவியாக இருப்பேன். இதனால் விவசாயம் வேலைகள் எல்லாம் அத்துப்படி. எங்களுக்குச் சொந்தமாக 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் சீசனுக்கு தகுந்தாற்ப் போல் பயிர்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்வேன். இதுபோக நிலத்தை தனித்தனியாக பிரித்து மா, தென்னை, எலுமிச்சை, அரளி என்று சாகுபடி செய்து வருகிறேன். மா சாகுபடிக்கு முன்பு என்னுடைய நிலத்தில் குச்சிக்கிழங்கை சாகுபடி செய்திருந்தேன். அதில் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் நல்ல லாபமும் கிடைத்தது. சேகோ பேக்டரி சொந்தமாக வைத்து நடத்தி வந்தேன். இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு முழுக்க முழுக்க மா சாகுபடியில் இறங்கினேன். மா சாகுபடி பற்றி ஏற்கனவே ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கொடுத்த பயிற்சிக்குப் பிறகே மா சாகுபடியில் முழுமையாக இறங்கினேன். என்னுடைய நிலத்திற்குத் தேவையான மா மரங்களை போச்சம்பள்ளியில் இருந்து வாங்கி வந்தேன்.

ஒரு மரம் ரூ.130 என விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்தேன். சேலம் குண்டு மாங்காய், பங்கனப்பள்ளி மாம்பழம், இமாம்பசந்த் என மூன்று வகை மா மரங்களை எனது தோட்டத்தில் நடவு செய்திருக்கிறேன். அடர் நடவு முறையில் சுமார் 300 மரங்களை நடவு செய்திருக்கிறேன். இதில் ஒவ்வொரு மரத்திற்கும் 290 சதுரஅடி நிலம் ஒதுக்கி இருக்கிறேன். மா மரக்கன்றுகளை வாங்கி வந்தபோதே 4 அடி உயரத்திற்கு இருந்தது. இதில் வேர்கள் அதிகம் இருக்கும். இதனால் 2.5 அடி நீளம், 2.5 அடி அகலம், 2.5 அடி உயரம் கொண்ட குழி தோண்டி அதில் மாங்கன்றுகளை நடவு செய்தேன்.குச்சிக்கிழங்கு அறுவடை செய்திருந்ததால் மண் ஏற்கனவே ஓரளவிற்கு பொலபொலப்பாக இருந்தது. இதனால் மூன்று உழவு மட்டும் ஓட்டினேன். மாங்கன்று நடவுக்கு முன்பு அடியுரமாக எரு உரம், குப்பை, இலைகளை இட்டேன். இந்தத் தருணத்தில் நிலம் நல்ல ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வேர்கள் காய்ந்து போகாமல் நன்கு நீண்டு வளரும். மூன்று வகை மா மரங்களையும் தலா 100 என்ற கணக்கில் நடவு செய்திருக்கிறேன். ஒரு வகை மாங்கன்றுகளை நடவு செய்வதன் மூலம் ஒரு ரகத்தில் மாங்காய் கிடைக்கவில்லை என்றாலும், வேறொரு ரகத்தில் இருந்து மகசூல் பெறலாம். இதைக் கருத்தில் கொண்டே தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனையுடன் 3 வகையான மாங்கன்றுகளை நடவு செய்திருக்கிறேன்.

மாங்கன்றுகளை நடவு செய்ததில் இருந்து மூன்றாவது நாளில் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவேன். மாதம் ஒருமுறை களை எடுப்பேன். மழைக்காலங்களில் தோட்டத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கிவிடும் சூழல் ஏற்படும். அதுபோன்ற சூழலில் மாங்கன்றுகள் அழுகிவிட அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆகவே மழைக்காலங்களில் நிலத்தில் தண்ணீர் தேங்கி விடாமல் இருக்க அருகில் இருக்கும் தென்னந்தோப்பிற்கு வாய்க்காலை திறந்து விட்டுவிடுவோம். களை எடுத்த பின்னர் மரங்களைச் சுற்றி எரு உரம் போடுவோம். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் மாந்தோப்புக்கு கவாத்து செய்ய ஏற்ற பருவம். அதிக துளிர் விடும் நுனிக்கிளைகளில் திடமான 2 அல்லது 3 கிளைகளைத் தவிர மீதமுள்ள துளிர்களை நீக்கி விடுவோம். நன்கு விளைச்சல் கொடுத்த மா மரங்களில் 20 சதவீத கிளைகளை அகற்றி விடுவோம். மேலும், உற்பத்தி குறைவாக உள்ள மரத்தில் 40 சதவீத கிளைகளைக் கூட அகற்றி விடுவோம். அப்போதுதான் புதிய கிளைகள் வளர்ந்து தேவையான காய்ப்பு கொடுக்கும். குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகள் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகளை முற்றிலுமாக அகற்றிவிடுவோம். இதனால் மற்ற கிளைகள் வெகுவாக பாதிக்கப்படும். கிளைகளை அகற்றுவதற்கு கூர்மையான கத்திகளை மட்டுமே பயன்படுத்துவோம். இல்லையென்றால் மரங்களில் இருந்து புதிய கிளைகள் வராது.

முதலில் நிலத்திற்கு வாய்க்கால் மூலம் மட்டுமே தண்ணீர் பாய்ச்சி வந்தேன். தற்போது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை உதவியுடன் மாந்தோப்பு முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்சி வருகிறேன். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே பார்த்துக் கொண்டது. இதற்கு மட்டும் ரூ.75 ஆயிரம் செலவானது. நான்கு ஆண்டுகள் ஆன மரங்களுக்கு 50 கிலோ தொழு உரம், 2.2 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.5 கிலோ பொட்டாஷ் உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, நவம்பர் முதல் ஜனவரி வரையில் பூப்பூக்கும் பருவத்தில் மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் மகசூல் வெகுவாக குறைந்தது. இந்த ஆண்டு நன்றாக காய்ப்பு வந்திருக்கிறது.

இடைப்பருவத்தில் பூச்சித் தாக்குதல் மரத்தில் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர்க்க தோட்டக்கலைத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் ஐந்திலைக் கரைசல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்போம். இடைப்பருவத்தில் அதிகமான நீர் தேவைப்படும். இதனால் நிலத்தில் அமைத்துள்ள சொட்டுநீர்ப் பாசனம் மூலம் காலை, மாலை என இரு வேளையும் தண்ணீர்ப் பாய்ச்சுவோம். பூச்சிக்கட்டுப்பாடு, புதிய டெக்னிக், பராமரிப்பு என பனமரத்துப்பட்டி தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலைத்துறை அதிகாரி குமரவேல் நேரில் வந்து நல்ல ஆலோசனைகள் தருகிறார். மா மரங்களில் பூ வைத்த நாளில் இருந்து 2வது மாதத்தில் நன்றாக எடை அதிகமான மாங்காய்கள் கிடைக்கும். எங்களுடைய தோட்டத்தில் இருக்கும் மா மரங்கள் அனைத்தும் மூன்றரை வருடத்திற்கு மேற்பட்டது என்பதால் இப்போது ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. கடந்த ஆண்டினை விட இந்த வருடம் அதிகமாக பூக்களை விட்டிருந்தது. இதனால் ஒரு மரத்தில் இருந்து குறைந்தது எங்களுக்கு 50 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சராசரியாக இமாம்பசந்த் ரகத்தில் இருந்து 5 ஆயிரம் கிலோவும், பங்கனப்பள்ளியில் இருந்து 5 ஆயிரம் கிலோவும் உறுதியாக கிடைக்கும். மொத்தமாக 10 டன் மகசூல் கிடைக்கும். தற்போது உள்ள மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ இமாம்பசந்த் ரூ.150 லிருந்து ரூ.200 வரை விற்பனையாகிறது. அதேபோல் பங்கனப்பள்ளி ரூ.100 லிருந்து ரூ.120 வரை விற்பனையாகிறது. சராசரியாக இமாம்பசந்த் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரு சீசனுக்கு ரூ.7.5 லட்சம் வருமானமாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும், இமாம்பசந்த் பழங்கள் நன்றாக விற்பனை ஆகும். இதன் சுவைக்கு மற்ற எந்த வகை மாம்பழமும் ஈடுகொடுக்க முடியாது. அதேபோல் பங்கனப்பள்ளி சராசரியாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரு சீசனுக்கு ரூ.5 லட்சம் வருமானமாக கிடைக்கும். மாமரத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு ரூ.12.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரச்செலவு, வண்டி வாடகை, ஆட்கள் கூலி என்று ரூ.1.80 லட்சம் போக ரூ.10.7 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இவை அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் தோட்டக்கலைத்துறையின் பங்களிப்பே முக்கிய காரணம்.

என்னுடைய கவனம் முழுவதும் தற்போது முழுக்க முழுக்க மாந்தோப்பில் மட்டுமே இருப்பதால் தென்னந்தோப்பை குத்தகைக்கு விட்டு விட்டேன். இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் கிடைக்கிறது. மேலும் அரளிச் செடியினையும் குத்தகைக்கு விட்டிருக்கிறேன். மொத்தம் 500 அரளிச்செடிகள் இருக்கின்றன. தற்போது ஒரு அரளிச்செடியினை ரூ.200 என்ற கணக்கில் குத்தகைக்கு விட்டிருக்கிறேன். இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு எனக்கு ஒரு லட்ச ரூபாய் லாபமாக கிடைக்கிறது. மாங்காயைப் பொருத்த வரையில் இரண்டு ஆண்டுகளில் இருந்தே நமக்கு காய்கள் வரத் தொடங்கிவிடும். ஆனால் நான்காவது வருடத்தில் பூக்களை விட்டு அறுவடை செய்தால் கண்டிப்பாக நாம் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் ஜெயராமன்.
தொடர்புக்கு:
ஜெயராமன்: 95973 74757.

 

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்