மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுப்பதை கண்டித்து அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு: போக்குவரத்து பாதிப்பு

மாமல்லபுரம்: சென்னை கோயம்பேடு, அசோக் பில்லர் ஆகிய பகுதிகளில் இருந்து புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு இசிஆர் சாலை வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் கிண்டி, திருவான்மியூர் வந்து இசிஆர் சாலையை பிடித்து கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளை கடந்து புதுச்சேரி சென்று, அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பிரிந்து செல்கிறது. மேலும், இந்த பஸ்கள் கிண்டி, திருவான்மியூர் ஆகிய நிறுத்தங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கடந்த சில மாதங்களாக பகல் நேரங்களில் மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.

இதில், குறிப்பாக இரவு நேரங்களில் மாமல்லபுரம் பயணிகளை சுத்தமாக ஏற்றுவதே இல்லை. பின்னர், 2 அல்லது 3 பேருந்துகளை பிடித்து மாமல்லபுரம் வந்து சேருகின்றனர். இதனால், கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்பட்டு கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து போக்குவரதுத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரத்தை சேர்ந்த சிலர் நேற்று மாலை கிண்டியில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் ஒரு அரசு பேருந்து ஏறினர்.

அப்போது, ஓட்டுனர் மற்றும் நடத்துடனர் மாமல்லபுரத்தில் பேருந்து நிற்காது இறங்குகள் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதையும் மீது அவர்கள் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர், அவர்கள் இது குறித்து மாமல்லபுரத்தில் உள்ள தங்களது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திரண்டனர். பின்னர், 60க்கும் மேற்பட்டோர் திடீரென அவர்கள் வந்த அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், சிலர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டி தீர்த்தனர். இதையடுத்து, நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இனி இது போன்று தவறு நடக்காது என கூறியதையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் இசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிண்டியில் மாமல்லபுரம் பயணிகளை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதை கண்டித்து மாமல்லபுரம் இசிஆர் பஸ் நிறுத்தத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களை மறித்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மக்களவை 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது: ஆந்திரா சட்டப்பேரவைக்கும் 13ம் தேதி வாக்குப்பதிவு

காங்கிரசுக்கு அதானி, அம்பானி கறுப்பு பணம் சப்ளையா? மோடி புகார் குறித்து ராகுல் காந்தி விசாரணை கோரியது சரியானது தான்: ப.சிதம்பரம் கருத்து

மோடியால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஜனநாயகத்தை நம்பாதவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன்: சரத் பவார் காட்டமான பதிலடி