மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்: கம்போடியா பயணி கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக அதிகளவில் போதைபொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் டிரான்சிஸ்ட் பயணியாக வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாரத் வசித்தா என்பவரிடம் இருந்து ரூ.28 கோடி மதிப்பிலான கோகைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று 2வது நாளாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இன்று காலை சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த கம்போடியாவை சேர்ந்த பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்ததில், பைக்குள் ரூ.35 கோடி மதிப்பில் சுமார் 3.50 கிலோ எடையிலான கோகைன் போதைபொருள் பார்சலை மறைத்து கடத்தி வந்திருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

கம்போடியாவை சேர்ந்த பயணியிடம் இருந்து ரூ.35 கோடி மதிப்பிலான கோகைன் பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்து, தனியறையில் வைத்து, இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார், தீவிரவாதிகள் அதிகளவில் பயன்படுத்தும் இத்தகைய கோகைன் போதைபொருளை சென்னைக்கு கடத்திவர காரணம், இதன் பின்னணியில் யார், யார் என மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு