திரவுபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்


மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே லட்சுமி நாராயணபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக நேற்றுமுன்தினம் காலை 9 மணி அளவில், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அன்றைய தினம் மாலை 5 மணி அளவில், பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்க்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் மற்றும் 108 மூலிகை ஹோமங்கள், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்ட பந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

நேற்று காலை 6 மணி அளவில், மங்கள இசையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. நாடி சந்தானம், மூலமந்திர ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணி அளவில், யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசம் மீது தெளித்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்