மதுராந்தகம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.30.40 கோடி ஒதுக்கீடு: நகராட்சி ஆணையர் தகவல்

மதுராந்தகம்: மதுராந்தகம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.30.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் புதிதாக அமைய உள்ள குடிநீர் மேம்பாடு பணிகள் குறித்து மதுராந்தகம் நகராட்சி ஆணையர் அருள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, மதுராந்தகம் நகராட்சியில் கடப்பேரி, செங்குந்தர் பேட்டை, வன்னியர் வீதி, மோச்சேரி, காந்திநகர், சின்ன காலனி, ஆனந்த நகர், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 24 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கே ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் அம்ருத் எனும் திட்டத்தின் கீழ் நகராட்சிக்குட்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சுமார் ரூ.30 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.  இதற்கான பூமிபூஜை விழா சமீபத்தில் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரி அருகே உள்ள விவசாய பாசன ஏரி பகுதியில் நடைபெற்றது. இதில், முதற்கட்டமாக மதுராந்தகம் விவசாய பாசன பெரிய ஏரியின் ஒரு பகுதியில் 6 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன.

இந்த ஒவ்வொரு கிணறும் 8 மீட்டர் சுற்றளவிலும், 10 மீட்டர் ஆழத்திலும் அமைய இருக்கின்றன. மேலும் இந்த கிணறுகள் அமைக்கப்படும் பகுதியில் பெரிய அளவிலான சம்ப் ஒன்று அமைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த 6 குடிநீர் கிணறுகளில் இருந்து மதுராந்தகம் நகருக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பைப்லைன் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நகருக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 6,300 வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது.

இதற்கு மட்டும் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிற்கு பைப் லைன்கள் அமைக்கப்படுகிறது. மேலும், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 55 லட்சம் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க அரசு செயல்பட்டு வருகிறது’ என்றார்.

Related posts

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்

ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!