மதுராந்தகம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியானது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி புறப்படும் வாகனங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் அதிகபட்ச நெருக்கமாக பயணிக்கும் ஒரு சாலையாக இந்த பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திண்டிவனம் தொடங்கி விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு கிளை சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றிணைந்து திண்டிவனத்திற்கு பிறகு சென்னை நோக்கி இந்த மதுராந்தகம் நெடுஞ்சாலை வந்தடைகின்றன. இதேபோன்று, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களும் இந்த சாலையில் நெருக்கமாக பயணிக்கின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மதுராந்தகம் பகுதியில் விபத்துகளும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில், நான்கு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இறந்த மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து இந்த நெடுஞ்சாலை பகுதிகளில் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே புக்கத்துறை, பாக்கம், சிறுநாகலூர், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு போன்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையின் இருமார்க்கத்திலும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.

இவர்கள் லாரிகளை நிறுத்துவதற்கு என்று படாளம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தாமல், இதுபோன்று அவர்களின் தேவைகளுக்காக அனுமதி இல்லாத தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் தான் நான்கு மாணவர்கள் உயிரிழந்த விபத்து நடைபெற்றது. இனிமேலும், இதுபோன்று நடக்காமல் இருக்க சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தும் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு