முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு: 30.55 லட்சம் பேர் பயனடைவர்; மாற்றுத்திறனாளி, கைம்பெண்கள் உதவித்தொகையும் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் முதியோர் உதவித்தொகையை ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், சுமார் 30.55 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். மேலும், மாற்றுத்திறனாளி, கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தம் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான அனுமதி, புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதவிர, கடந்த பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை கூட்டம் சட்டப்பேரவையில் நடந்தபோது, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில், செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் முதியோர் உதவித்தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழ்நாட்டில் பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்திராகாந்தி மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டம், 50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலங்கையில் இருந்து வந்துள்ளவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளது.

ஓய்வூதிய திட்டங்களில் வரலாற்றை பார்க்கும்போது 1962ம் ஆண்டில் இருந்துதான் படிப்படியாக இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் மாதம் ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் இந்த தொகை உயர்த்தப்பட்டு இப்போது 1000 ஆக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1500 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பேர் மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று வருகிறார்கள். மேலும், 74 லட்சத்து 73 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதியம் அதிகரித்து வழங்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும். உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் பல்வேறு வாரியத்தில் உள்ளவர்களுக்கும் சென்று சேரும்.

தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள 1.34 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். கட்டிட தொழிலாளர் வாரியத்தில் இருப்பவர்களும் பயன்பெறுவார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 30.55 லட்சம் பேருக்கும் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,200ஆக கூடுதலாக கிடைக்கும். அதேபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாம்கள் திங்கள் (நாளை) முதல் துவங்க இருக்கிறது. நியாய விலை கடைகள் மூலம் தற்போது விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக, ஆகஸ்ட் மாதத்திற்குள் மூன்று கட்டங்களாக 35,925 முகாம்கள் நடத்தப்படும். முகாம்களில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். முதல் நாளில் சுமார் 21 ஆயிரம் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இதுவரை 50 லட்சம் பேருக்கு விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
* ஓய்வூதியம் கேட்டு 74 லட்சத்து 73 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* தற்போது ஓய்வூதியம் அதிகரித்து வழங்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும்.
* ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 30.55 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,200ஆக கூடுதலாக கிடைக்கும்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்