காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பெண் அதிகாரி தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் மேல்தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் திலகவதி (26). இவர், சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரத்தை சமீபத்தில், தனது பெற்றோரிடம் திலகவதி தெரிவித்துள்ளார். உடனே அவரது பெற்றோர், அந்த வாலிபர் பற்றி விசாரித்துள்ளனர். அதில், அவ்வாலிபரின் பழக்கவழக்கம் சரியில்லை என்பதால், காதலை கைவிடும் படி திலகவதியிடம் பெற்றோர் கூறியுள்ளனர். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திலகவதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலை திலகவதி, தனது வீட்டின் முற்றத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனே பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக திலகவதி கூறினார். உடனே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு திலகவதியை உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே திலகவதி இறந்துவிட்டார் எனத்தெரிவித்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சந்தேகங்கள் தீருமா?