தாமரைப்பூ சாகுபடி : நெல் மகசூலை விட 3 மடங்கு லாபம்

குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, வாழை, ரப்பர் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு, மா, பலா மற்றும் பணப்பயிர்களான கிராம்பு, ஜாதிக்காய், நல்லமிளகு உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் தங்களது வேலைகளை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தை செய்து வருகின்றனர். இயற்கையாக விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிக விலை இருந்தாலும் மக்கள் விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.

அந்த வகையில் குமரி சுற்றுவட்டாரப் பகுதியில் தாமரைப் பூ விவசாயமும் நல்ல வாருவாயுடன் மகசூல் செய்து வருகின்றார்கள் விவசாயிகள். தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக தாமரை இலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் குளங்களில் தாமரை வளர்க்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனையும் மீறி சிலர் தாமரை வளர்த்து வருகின்றனர். இதற்கு மாற்றாக குமரி மாவட்டத்தில் சில விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் தாமரை விவசாயத்தை செய்து அதிக லாபத்தை பெற்று வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள லாயத்தை சேர்ந்த அப்துல்காதர் என்பவர் விளை நிலத்தில் தாமரைப் பூ வளர்த்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றார். இதற்காக அவர் லாயம் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் ஊற்றி சமன் செய்து தாமரைப் பூ வளர்த்து வருகிறார். இது குறித்து அப்துல் காதரிடம் காலைபொழுதில் பேசினோம்.

“கடந்த 10 வருடமாக தாமரைப் பூ ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக லாயம் பகுதியில் உள்ள 6 ஏக்கர் விளை நிலத்தை சுமார் 6 அடி அளவிற்கு ஆழப்படுத்தி அதில் தண்ணீரை நிரப்பி தாமரை வளர்க்கிறேன். இதற்காக கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டுரக தாமரையை வளர்த்து வருகிறேன். இந்த தாமரைக் கொடியில் இருந்து பறிக்கப்படும் பூ 3 நாட்களுக்கு அப்படியே இருக்கும். ஒட்டு ரகம் என்பதால் 10 ஏக்கர் பரப்பளவில் கிடைக்கும் பூ ஒரு ஏக்கர் நிலத்திலேயே கிடைக்கும்.

லாயத்தை போன்று நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியில் 20 ஏக்கர் விளை நிலத்தில் தாமரை சாகுபடி செய்துள்ளேன். தாமரை பூ வளர்ப்பதற்கு தண்ணீர் தேவை என்பதால், கிணறு பயன்படுத்தி வருகிறேன். சாகுபடி செய்யப்பட்டுள்ள தாமரை செடியில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் தாமரை பூ அறுவடை செய்யப்பட்டும். வயல்களில் சாகுபடி செய்து இருக்கும் தாமரை பூக்களை பறித்து கொண்டு வருவதற்கு என 15க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் என்னிடம் வேலை செய்து வருகின்றனர். எனது மகன் இப்ராகீம் பிஇ முடித்துவிட்டு எனக்கு உதவியாக இருந்து வருகிறான். தாமரை பூ டெல்லி, கொல்கத்தா, மும்பை, குஜராத், பெங்களூரு, ைஹதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகிறேன். தற்போது ஒரு தாமரை ரூ.2க்கு விற்பனை செய்து வருகிறேன். முக்கிய பண்டிகை காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தாமரை பூக்களின் விலை உயரும். அப்போது ஒரு பூவின் விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படும்.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் நிரப்பி, தாமரை வளர்வதற்கு உரங்கள் போடுவது என ரூ.1.50 லட்சம் வருடத்திற்கு செலவு ஆகும். உரமாக சாணம், காம்ளக்ஸ், டிஏபி போட்டு வருகிறேன். நெல் சாகுபடியில் இருந்து 3 மடங்கு லாபம் கிடைக்கும். நெல் சாகுபடி செய்வதுபோல் தாமரைச் சாகுபடி செய்வது கஷ்டம் இல்லை. வட மாநிலங்களில் விஷேச நாட்களில் தாமரை பூக்கள் பயன்படுத்தும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இதனால் வடமாநிலத்தில் தாமரைப் பூவின் தேவைகள் அதிக அளவு இருந்து வருகிறது என்றார்.

2 நாட்களுக்கு ₹4 ஆயிரம் வருமானம்

அப்துல்காதரை போன்று குமரி மாவட்டத்தில் மேலும் சிலர் விளை நிலங்களில் தாமரை பூ சாகுபடி செய்து வருகின்றனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லாயத்தில் அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்த மணிகண்டன், லாயத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தில் தாமரை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.இது குறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். தென்னையில் தேங்காய் வெட்டும் வேலையும் செய்கிறேன். லாயம் ஜங்ஷன் அருகே ஒருவரிடம் இரண்டே முக்கல் ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இந்த நிலம், நெல் சாகுபடி செய்வதற்கு உகந்ததாக இல்லை. அவரிடம் நான் தாமரை வளர்ப்பதற்காக அந்த நிலத்தை தருமாறு கேட்டேன். அவரும் 5 வருடம் குத்தகைக்கு அந்த நிலத்தை கொடுத்தார். அதில் நானும், எனது நண்பர் கண்ணணும் இணைந்து தாமரை சாகுபடி செய்துள்ளோம். இதற்காக வயலை சுமார் மூன்றரை அடி ஆழப்படுத்தியுள்ேளாம். அதில் கிடைத்த மண்ணை வைத்து கரையை உயர்த்தி, பலப்படுத்தினோம். பின்னர் அதில் தண்ணீர் பாய்ச்சி தாமரை விதைகள் விதைத்தோம்.

இதற்காக ரூ.80 ஆயிரம் செலவு செய்தோம். தற்போது தாமரை பூ அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 800 பூக்கள் கிடைக்கும். தற்போது ரூ.2க்கு எங்களிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. பூ பறிக்கும் போது ரூ.1600 வருமானம் கிடைக்கும். சீசன் காலங்களில் தாமரை பூ ரூ.5க்கு எங்களிடம் கொள்முதல் செய்வார்கள். அந்த நேரத்தில் ரூ.4 ஆயிரம் வரை கிடைக்கும். மாதத்திற்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இலையிலும் பணம் கிடைக்கும். ஆனால் நாங்கள் சாகுபடி செய்துள்ள தாமரையில் போதிய அளவு இலை இல்லாததால், இலை பறித்து விற்பனை செய்யவில்ைல. குறைந்த முதலீட்டில் இரு நாட்களுக்கு ஒரு முறை நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் ஆகும்.

இதே போன்று குமரி மாவட்டத்தில் லாயம், நல்லூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் தாமரைப் பூ சாகுபடி செய்து வருகின்றனர். தாமரைப்பூவால் நிரந்தர வருமானம் கிடைத்து வருவதால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வளர்த்து வரும் தாமரைக்கு எந்த வகையான இயற்கை உரங்களும், ரசாயன உரங்களும் பயன்படுத்தவில்லை. உரத்தை பயன்படுத்தினால், தொடர்ந்து உரம் போட வேண்டும். உரம் போடாதபோது, மகசூல் குறையும். தற்போது வெளி மாவட்டங்களில் தாமரை பூவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், எங்களை போன்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாமரை பூவிற்கு நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது என சந்தோஷமாக தெரிவித்தார்.

தாமரைப் பூ மாலைகள்

வட மாநிலத்தில் திருமண மாலை, வரவேற்பு மாலை உள்பட அனைத்து மாலைகளிலும் தாமரைப் பூ விற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தாமரை பூவால் ஆன தனி மாலைகளும் இடம்பிடிக்கிறது. இதனால் இங்கு ரூ.2க்கு தாமரைப் பூ விற்பனை செய்யும்போது வட மாநிலத்தில் ஒரு பூ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படும். அதுவே இங்கு ரூ.30க்கு விற்பனை செய்யும்போது அங்கு 3 பூக்கள் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுவதாக அப்துல் காதர் தெரிவித்தார்.

விமானத்தில் பறக்கும் பூக்கள்

தாமரைப் பூ ஏற்றுமதி செய்வதற்கு தனியாக தெர்மாகூல் பெட்டி பயன்படுத்தப்படுகிறது. அதற்குள் தாமரை இலையை போட்டு அதன்மேல் தாமரை பூவை வைக்கின்றனர். பின்னர் ஐஸ்களை பாக்கெட்டுகளில் அடைத்து பூவின் மேல் வைத்து மூடி விடுகின்றன்றனர். பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தேவைக்கு ஏற்ப வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வடமாநில வியாபாரிகள் அனைத்து போக்குவரத்து செலவையும் ஏற்றுக்கொள்வார்கள். தற்போது தினமும் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பூக்கள்அனுப்புகிறோம். பண்டிகை காலங்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பூக்கள் தினமும் அனுப்பியதாக என அப்துல் காதர் தெரிவித்தார்.

Related posts

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!!

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி 23-ம் தேதி தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!