மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல்.. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

சென்னை : தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.செங்கோல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் 3 மாநில ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “செங்கோலை உருவாக்கித் தந்த சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடை அதிபர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் செங்கோல் விழாவுக்கு 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். திருவாவடுதுறை, குன்றக்குடி, பழனி உள்ளிட்ட 20 ஆதீனங்கள் வரவழைத்து மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக இருக்கப்போகிறது செங்கோல்.

ஆட்சி பரிமாற்றத்தைக் குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இது தமிழகத்திற்கு கவுரவமான, பெருமிதமான விஷயம். இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. மக்களுக்காகவாவது நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் பெங்கேற்க வேண்டும். குடியரசுத் தலைவரை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி இல்லை.ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை திறக்கும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். முன்பு குடியரசுத் தலைவரை விமர்சித்தவர்கள் தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.”என்றார்.

Related posts

பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!!

கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?: சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தொடரும் போலீஸ் சோதனை..!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வரவேற்பு..!!