2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது யுக்தி; ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் கலக்கும் அரசியல் கட்சிகள்.! மொழி பெயர்ப்பு உரை, மறைந்த தலைவர்களின் உரைக்கு வரவேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை நடந்த தேர்தல்களை காட்டிலும் 2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலின் பிரசார களம் முற்றிலும் மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சிதான். அரசியல் கட்சிகள் தங்களது பிரசார செய்திகளை வழங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தொழில்நுட்பம் மூலம் தலைவர்களின் உரைகளை உடனுக்குடன் மொழிபெயர்க்க முடிகிறது. டிஜிட்டல் ஆங்கர்களையும் உருவாக்க முடிகிறது. மறைந்த தலைவரின் உருவத்தை நிஜமாகத் தோற்றமளிக்கும் வகையிலும், அவர்களே உரையாற்றுவது போன்றும் ஏஐ தொழில்நுட்பம் உதவுகிறது. எனவே இந்தத் தேர்தலில் ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு டிசம்பரில் வாரணாசியில் நடந்த நிகழ்வின் போது, தனது இந்தி உரையை தமிழில் உரையாற்றியது போன்று ஏஐ தொழில்நுட்பத்துடன் உடனடி மொழிபெயர்ப்பு முறையை கையாண்டார்.

அதற்காக ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியான ‘பாசினி’யைப் பயன்படுத்தினார். அப்போது பிரதமர், ‘நான் முதன்முறையாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன், எதிர்காலத்திலும் அதைப் பயன்படுத்துவேன்’ என்று கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசார உரைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, அதனை பல்வேறு மொழிகளில் தனது சமூக ஊடக முகவரியில் வெளியிட்டு வருகிறார். இந்த விசயத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில், பெங்காலி, தமிழ், ஒடியா, மலையாளம் மற்றும் பிற மொழிகளில் பிரதமர் மோடியின் உரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. பாஜகவைப் போலவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மறைந்த முன்னாள் தலைவர்கள் தற்போது தேர்தல் பிரசாரம் செய்வது போன்ற வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வெளியிட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில், மா.கம்யூ கட்சி தனது தேர்தல் செய்தியை வீடியோக்கள் மூலம் வெளியிட்டு வருகிறது. இதற்காக ‘சமதா’ என்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆங்கரை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ‘குளோன்’ செய்யப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் இந்தியாவின் தேர்தல் வியூகம் கடந்த 30 ஆண்டுகளாக படிப்படியாக மாறி வருகிறது. கடந்த 1990ம் ஆண்டுகளில் பரவலாகப் பயன்படுத்திய தொலைபேசி அழைப்புகள், 2007ம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் செல்போன் அழைப்புகள், 2014ல் ஹாலோகிராம்களின் பயன்பாடு, தற்போது ஏஐ தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, 2014 பொதுத் தேர்தலின் பிரசாரக் கருவிகளாக சமூக ஊடகங்கள் இருந்தன. இந்த தேர்தலை இந்தியாவின் முதல் சமூக ஊடகத் தேர்தல் அல்லது பேஸ்புக் தேர்தல் என்று கூட அழைத்தனர். ஏஐ தொழில்நுட்ப பிரசாரத்தால் நன்மைகள் இருந்தாலும் கூட, அதே தொழில்நுட்பத்தால் போலியான மற்றும் அவதூறு கருத்துகளும், வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன. வாக்காளர்களை பாதிக்கக்கூடிய போலி புகைப்படங்கள், ஆடியோ அல்லது வீடியோக்களும் வெளியாகின்றன.

தேர்தல் பிரசாரங்களின் போது தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்புவதற்கு ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளின் பரவலை பகுப்பாய்வு செய்வதற்கும், முறைப்படுத்துவதற்கும் சைபர் மற்றும் தானியங்கு வழிமுறைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தேர்தல் முடிவுகளைப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர். சமூகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் டீப் ஃபேக் வீடியோ, புகைப்படங்களை அகற்ற, லோக்சபா தேர்தலுக்கு பின்னர் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். இந்த மாத தொடக்கத்தில், கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு, இந்திய தேர்தல் செயல்முறையின் நேர்மையை பாதிக்காத வகையில் தங்களது சேவை இருக்க வேண்டும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சில ஆலோசனையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி

கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம்