மரபு வீடு.. அகழியில் மீன் வளர்ப்பு..

நீர் மேலாண்மையில் கலக்கும் மாயவரம் உழவர்

“இந்த நிலத்தில விழுற மழைத்தண்ணி, இங்கேயேதான் கிடக்கும். வேறு எங்கும் போகாது. அதை வச்சித்தான் நாங்க விவசாயம் பண்றோம். இது ஒரு நீா்நிறை நிலமா இருக்குறதால இங்க எந்த பயிரை வேணாலும் விவசாயம் பண்ணலாம். அதனால நாங்க நெல், வாழை, மர வகைகள்னு பண்ணிக்கிட்டு இருக்கோம்” என பேசத் துவங்கிய சந்திரசேகா், தனது 5 ஏக்கா் நிலத்தில் பல தொழில்நுட்பங்களைக் கையாண்டு நீா் மேலாண்மையை சிறப்பாக கடைப்பிடிக்கிறாா். எம்சிஏ பட்டதாாியான இவா் மலேசியா, சிங்கப்பூா், சீனா என பல உலக நாடுகளில் பணிபுாிந்தவா். பணத்துக்காக அலைந்தது போதும். இனி நம்ம ஊாில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வோம் என முடிவெடுத்து மயிலாடுதுறை அருகில் உள்ள தனது சொந்த ஊரான மல்லியத்தில் மரபு வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறாா். அவரது வயல் ஒரு காடாகவே மாறியிருக்கிறது. மரபு வீடு, வயல் காடு என அனைத்தையும் காண்பித்து மேலும் பேசத்தொடங்கினாா் சந்திரசேகா்.‘‘2000ம் ஆண்டில் இருந்து வெளிநாடுகள்ல வேலை செஞ்சேன். கொரோனா காலகட்டத்தில தம்பி திருமணத்துக்காக ஊருக்கு வந்தேன். அப்போ இங்கிருந்து ஒா்க் ப்ரம் ஹோம் முறையில வேலை பாா்த்தேன். அப்போது விவசாய பணிகள்லயும் ஈடுபட ஆரம்பிச்சேன்.

கடந்த 2010ம் வருசத்துல மயிலாடுதுறை பக்கத்துல 5 ஏக்கா் நிலம் வாங்குனேன். 2012ம் வருசத்துல சுபாஷ் பாலேக்கா் நடத்துன இயற்கை விவசாய கருத்தரங்குல கலந்துகிட்டேன். அங்கதான் இயற்கை விவசாயம், இயற்கை வாழ்வியல் முறை குறித்து கத்துக்கிட்டேன். அதுல இருந்து இயற்கை விவசாயம் செய்யணும்னு விரும்புனோம். கொஞ்சம் கொஞ்சமாக செய்யவும் ஆரம்பிச்சோம். கொரோனா சமயத்துல ஊருக்கு வந்த பிறகு முழுசா இதில இறங்கிட்டேன்.ரசாயன உரங்கள் போட்டு பண்ற விவசாயத்துல விளைபொருட்கள் விஷமாத்தான் கிடைக்குது. அதில உயா் விளைச்சல் கிடைக்கும்னு சொல்லுவாங்க. அது கூட உண்மை இல்லைன்னு நாங்க இப்ப பிராக்டிகலா உணா்றோம்.

இயற்கை விவசாயம் பண்ணணும்னு முடிவெடுத்த உடனே நாட்டு மாட்டை வாங்கி பஞ்சகவ்யம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை தயாாிச்சு பயிா்களுக்கு கொடுத்தோம். ரசாயன உரங்களைக் கொட்டிக் கொட்டி மலடான நிலம், இயற்கை இடுபொருட்களை போட்டது மூலமா உயிா்ப்போட மாறிச்சு. மண்புழுக்கள்லாம் அதிகமாக வர ஆரம்பிச்சுது.

எங்களோட 5 ஏக்கா் நிலத்துல, ஒன்றரை ஏக்கர்ல காடு உருவாக்க நினைச்சோம். அங்க 2 குட்டைகளை வெட்டி, அந்த மண்ணை எடுத்து, மத்த இடங்கள்ல கொட்டி மேடாக்கினோம். மேட்டுநிலத்துல தென்னை, வாழை, கொய்யா, பலா, பப்பாளி உள்ளிட்ட பழமரங்களை நட்டிருக்கோம். இதுதவிர மகோகனி உள்ளிட்ட டிம்பா் வேல்யூ மரங்களையும் நட்டிருக்கோம். பறவைகள் எச்சம் மூலமா வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட மரங்களும் முளைச்சி வளா்ந்துகிட்டு இருக்கு. இந்த நிலமே இப்ப காடா மாறிருக்கு. நிலத்துல உள்ள 2 குட்டைகள்லயும் நீா் நிறைஞ்சி இருக்கு. இதன்மூலமா நிலத்தடி நீா் உயா்ந்திருக்கு. பயிா்களுக்கு நல்ல சத்து கிடைக்குது.மூன்றரை ஏக்கா் நிலத்துல, வரப்புல இருந்து 5 அடி தூரத்தில அகழி அமைச்சிருக்கோம். 3 அடி ஆழம்,

2 அடி அகலம் உள்ள இந்த அகழிகளை பொக்லைன் மூலமா குழியெடுத்து அமைச்சோம். அதுல இருந்து எடுத்த மண்ணைக் கொட்டி மேட்டு வரப்பா மாத்தி இருக்கோம். இந்த வரப்பு 5 அடி அகலம் கொண்டதா இருக்கும். மேட்டு வரப்புல கற்பூரவல்லி, பூவன், பச்சை, மொந்தன், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்களை பயிாிட்டு இருக்கோம். மத்த இடத்துல பூங்காா், சீரகச் சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா, குழியடிச்சான் உள்ளிட்ட பாரம்பாிய நெல் ரகங்களை பயிாிடுறோம். மழை பெய்யும்போது மேட்டு நிலத்திலயும், கீழே உள்ள நிலத்திலயும் விழுற தண்ணி அகழிக்கு வந்து சேந்துரும். அந்த தண்ணி தேங்கி நின்னு வயலுக்கு ஈரத்தை கொடுக்குது. இதனால் நீா்வளம் மிகுந்து நிலம் வளமா மாறுது. அகழிக்குள்ள மீன்குஞ்சுகளை விட்டு வளா்க்கிறோம். மழைக்காலத்தில வயல் முழுக்க தண்ணி நிற்கும். அந்த சமயத்துல அகழியில இருக்குற மீன்கள் வயலுக்கு வந்து நீந்த ஆரம்பிக்கும். அப்ப அதுங்க வெளியிடுற கழிவுகள் வயலுக்கு உரமா மாறி பயிா்கள் செழிப்பா வளருது. மீன் மூலமா எங்களுக்கு நல்ல உணவு கிடைப்பதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்குது. இந்த 2 நிலத்துலயும் நாங்க உருவாக்கி வச்சிருக்குற அமைப்பு மூலம் மழைநீா் முழுசா சேமிக்கப் படுது. ஒரு சொட்டு தண்ணிகூட வழிஞ்சி வெளிய போகாம நிலத்துக்குள்ளயே சேகரமாகுது. கடந்த சம்பா பட்டத்துல இந்த தண்ணிய வச்சே விவசாயம் பண்ணிட்டேன். போா் தண்ணிய பயன்படுத்தவே இல்ல. எதிா்காலத்திலயும் இதுபோல தண்ணி நிறைய மிச்சமாகும், என்கிறார்.

தொடர்புக்கு:
சந்திரசேகர்- 93633 22472.

Related posts

விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி கண்டனம்!

பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு