பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் நபர்களால் எதிர்க்கட்சி தலைவர்போல் ஆளுநர் செயல்படுகிறார்: சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: தமிழக ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர்போல் செயல்படுகிறார். அவரை பின்னால் இருந்து ஆட்டுவிக்கிறார்கள் என்று திமுக சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தங்கசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனினும், கொரோனா காலத்தை கழித்தால் ஓராண்டுதான் என கணக்கிட முடியும். சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். நியாயமாக பார்த்தால் திமுக அரசு பற்றி குறைசொல்ல எதிர்க்கட்சி இல்லை. அந்த குறையை போக்கவே ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டதுபோல நடந்து கொள்கிறார். ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் அளித்த பேட்டியில் தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என சொல்லி இருப்பது பொய். ஆளுநரிடம் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. எந்த சட்ட மசோதாவையும் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படி இருந்தும் நிறுத்தி வைக்கிறார் என்றால் அவரெல்லாம் ஆளுநரா. அதனால் தான் நாகலாந்தில் இருந்து அவரை விரட்டி அடித்துள்ளனர்.

ஒரு ஆளுநர் இப்படி நடந்து கொள்ள மாட்டார். பேச மாட்டார். ஆனால் அப்படி நடந்து கொள்கிறார் என்றால், அவருக்கு பின்னால் யாரோ இருந்து ஆட்டுவிக்கிறார்கள். யார் பின்னால் இருந்தாலும் சரி, அவர்களுக்கும் சொல்கிறேன்.
பழையபடி நீங்கள் ஆட்சியை கலைத்துவிட முடியாது. அந்த காலம் எல்லாம் கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை காலத்தோடு முடிந்து விட்டது. அதேபோல திராவிடம் என்பது மாயை என ஆளுநர் சொல்லி உள்ளார். அது மாயை இல்லை ரவி அவர்களே, அதுதான் எங்கள் பிறப்புரிமை. பீகாரில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு திராவிடம் பற்றி தெரியாது. நேற்று முளைத்த காளான் இல்லை இந்தக் கட்சி. நாங்கள் 100 வருடம் கடந்துள்ளோம். இந்த 100 ஆண்டுகளில் நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றைக்கு நாங்களெல்லாம் உங்களை எதிர்த்து பேசுகிறோம் என்றால், எங்களை வளர்த்தது திராவிட இயக்கம் என்று பேசினார்.

Related posts

தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது: கார்கே

மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ வென்றால் அமித்ஷா தான் பிரதமர்: கெஜ்ரிவாலின் அதிரடி பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு

ஆந்திராவில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: பவன் கல்யாணுக்கு ராம்சரண் ஜெகன் கட்சி எம்எல்ஏவுக்கு அல்லு அர்ஜூன் பிரசாரம்