தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி அகரமுதலி இயக்ககம் நடவடிக்கை

திருத்தணி: தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில், திராவிட மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலியை வடிவமைக்க அகரமுதலி இயக்ககம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாடநூல்களும் பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலி வடிவமைப்பு தொடர்பான கூட்டம், கடந்தமாதம் 31ம் தேதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் நடைபெற்றது. அகரமுதலி இயக்கக இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமை உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழ்மொழியின் இனிமையையும், தமிழ்நாட்டின் பெருமையினையும் மற்ற மொழியினரும் அறிந்துகொள்வதற்கான பாலமாக இருக்கும் இக்குறுஞ்செயலியை விரைவில் உலக மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.’’ என்றார். இந்த கூட்டத்தில், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இராஜபாண்டியன் பங்கேற்று செயலியின் வடிவமைப்பு மற்றும் செயலாற்றும் விதம் குறித்து விளக்கியதுடன், செயலியில் செய்யப்பட வேண்டிய சீராக்கங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பது குறித்து மொழி வல்லுநர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதில் இடம்பெறும் 10 பாடத் திட்டங்கள் பன்மொழி அறிஞர்கள் குழுவினரால் சீராய்வு செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குநர், பேராசிரியர் முனைவர் நீ.ராஜசேகரன், சென்னை பல்கலைக்கழக கன்னடத் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து செழியன், மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்ட மொழி வல்லுநர் முனைவர் மு.கண்ணன், பன்மொழி அகராதி திட்ட ஒருங்கிணைப்பாளர் கி.தமிழ்மணி மற்றும் அகரமுதலி இயக்கக அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related posts

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு