குன்றத்தூர் முருகன் கோயில் பிரமோற்சவ விழா தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா: 21ம்தேதி ரத உற்சவம்

குன்றத்தூர்: சென்னை அடுத்த குன்றத்தூரில் பிரசித்திபெற்ற வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சாமி திருக்கோயில் உள்ளது. தென் தணிகை என்று போற்றப்படும் இக்கோயிலில் 400 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரமோற்சவ விழா நடக்கிறது. கடந்த 13ம்தேதி கிராம தேவதைகள் வழிபாடு மற்றும் பூஜைகளுடன் பிரமோற்சவம் விழா தொடங்கியது. 14ம்தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடந்தது. நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து காலை முதல் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. தத்ரூபமாக தங்கத்தால் செய்யப்பட்டதுபோல் காட்சியளித்த மயிலின் மீது முருகர் அமர்ந்து குன்றத்தூரில் முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

வரும் 19ம்தேதி மாலை 4 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 21ம்தேதி காலை 9 மணி அளவில் ரத உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குண சேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். விழாவில், குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Related posts

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி