கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்; திருவேற்காடு பகுதியில் பரபரப்பு

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் வீடுகள் இருப்பதாக கூறி அகற்ற வருவாய்துறை மற்றும் பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாது காப்புடன் வீடுகளை கணக்கெடுக்க குடியிருப்புக்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அகற்றுவது குறித்த உத்தரவு நகலை பொதுமக்கள் கேட்டனர். அதற்கு, ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே‌.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் லயன் ரமேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா