கேரளாவில் 12 பேரை கொன்ற அரிசிக் கொம்பன் யானை, கம்பத்தில் காவலாளி ஒருவரை அடித்து கொன்ற நிலையில் வனத்துறையினரால் பிடிபட்டது!!

தேனி: தேனி மாவட்ட மக்களை ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை கடந்த ஏப். 30ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால், அரிசிக்கொம்பன் யானை, மாவடி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேதகானமெட்டு வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதியான மேகமலை மற்றும் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது.

தொடர்ந்து தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. பின்னர் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி தோட்டப்பகுதிகளின் வழியே சென்று ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகில் உள்ள காப்புக்காடு என்ற இடத்தில் அடர்ந்த வனத்தில் நிலை கொண்டது. யானையின் நடமாட்டம் குறித்து 12 வனத்துறை குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினருடன் கம்பம் பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பனை இன்று அதிகாலை கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினரி சுற்றி வளைத்தனர். ஆவேசத்துடன் கும்கிகளை தாக்க வந்த கொம்பனுக்கு 2 மயக்க ஊசிகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது. இதில் நிலை குலைந்த அந்த யானை மயங்கி விழுந்தது. தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், அவற்றின் உதவியுடன் அரிசிக்கொம்பனை லாரியில் ஏற்றி மாற்று இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். ஆனால் அரிசிக்கொம்பன் எங்கு விடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டத்தை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

Related posts

திருப்பூரில் பெட்ரோல் பங்கில் தண்ணீரை ஸ்ப்ரே செய்வதன் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு!

நாளை மறுநாள் நடைபெறவுள்ள 3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு