ரசாயன கழிவுகளை முறைகேடாக வெளியேற்றும் தொழிற்சாலைகள்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரை பொங்கி வரும் தண்ணீர்; விவசாயிகள் கலக்கம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் ரசாய கழிவுகளால் பனிமலை போல் நுரைபொங்கி செல்வதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஓசூர் அடுத்துள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வினாடிக்கு 519 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 750 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனை பயன்படுத்தி கர்நாடக மாநில எல்லையில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளை முறைகேடாக ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தமிழ்நாடு பகுதியில் வெளியேற்றப்படும் தண்ணீரில் பனிமலை போல் நுரை பொங்கி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 640 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ரசாயன நுரையும் அதிகரித்துள்ளது.

இந்த ரசாயன நுரைகள் பறந்து சென்று அருகில் உள்ள விளை நிலங்களில் விழுந்து வருகின்றன. இதனால் சாகுபடி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

மின்தேவை புதிய உச்சம் 20,830 மெகாவாட் பயன்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம்

அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!!

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விடுதலை..!!