கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளி சீல் அகற்றக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டம்

திருப்போரூர்: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், மார்க்கெட் சாலையில் செயின்ட் மேரீஸ் பள்ளி எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்த 2018ம் ஆண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பள்ளி சொத்தை அடமானம் வைத்து ₹4 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அப்பள்ளியில் கடும் நிதி நெருக்கடி காரணமாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாகவும் பள்ளி நிர்வாகம் கடன் தொகையை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, செயின்ட் மேரீஸ் தனியார் பள்ளியை பூட்டி சீல் வைக்க உத்தரவு பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று அப்பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று வருவதாகவும், வரும் மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான இறுதித் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) நேற்று முதல் பதிவிறக்கம் செய்யவேண்டி உள்ளதாகவும், அதற்கு தேவையான மாணவர்களின் பதிவெண் பள்ளி நிர்வாகத்தின் உதவி முழுமையாக தேவைப்படுவதாகவும், வாங்கிய கடனை தரவில்லை என்று கூறி தேர்வு நேரத்தில் பள்ளிக்கு சீல் வைத்ததை ஏற்க முடியாது என்று அந்த தனியார் நிறுவன நடவடிக்கைக்கு அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை பள்ளி துவங்கியதும் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் பள்ளி மைதானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். இதனால் அவர்களை அழைத்து வந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோரும் மாணவர்களுடன் அமர்ந்து மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.