கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கீழக்கரை: கீழக்கரை அருகே, பெரியபட்டினத்தில் இன்று அதிகாலை நடந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவின் 122ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூன் 25ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் மாலை மவ்லீது ஓதப்பட்டது. 10ம் நாளான நேற்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா தொடங்கியது.

ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் திடலில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம், நாட்டிய குதிரைகள் நடனமாட, மேளதாளம் முழங்க இளைஞர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இந்த சந்தனக்கூடு ஊர்வலம் மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்ஹாவை மூன்று முறை வலம் வந்தது.

இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடுவில் வைத்து எடுத்து வந்த புனித சந்தனம் மக்பராவில் பூசப்பட்டு சந்தன பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் துபாய், கத்தார், சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சென்றவர்கள், தென்மாவட்ட மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாலை பகல்நேர கூடு நடைபெறவுள்ளது. ஜூலை 14ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பெரியபட்டினம் மகான் செய்யது ஒலியுல்லா தர்ஹா நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related posts

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு