கத்திரி வெயில் தொடங்கியது 7ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் 7ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், 7ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் இணைந்துள்ளன.

அதன் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும்.

இதற்கிடையே, சென்னை, கோவை, தர்மபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது. இதையடுத்து, 8ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் 8ம் தேதி வரை லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக அந்த பகுதிகளில் 7ம்தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மேற்கண்ட பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், கடலுக்கு சென்றவர்கள் 7ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு