கரூரில் நாய்கள் கடித்து மான் பலி

கரூர்: கரூர் அண்ணா நகரில் தனியார் நிறுவனம் சார்பில் டெக்ஸ்டைல்ஸ் குடோன் கட்டிட வேலை நடந்து முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஒரு புள்ளி மானை நாய்கள் துரத்திக்கொண்டு வந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க டெக்ஸ்டைல்ஸ் குடோனுக்குள் சென்று மான் பதுங்கி கொண்டது. இதை கண்ட அப்பகுதியினர் நாயை விரட்டி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனத்துறை குழுவினர் விரைந்து வந்து வலைவீசி மானை பிடித்தனர். மானின் உடல் முழுவதும் சிராய்ப்புகளும், காயங்களும் இருந்தன. பிடிபட்ட மானை கரூர் வையாபுரி நகரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மானை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் வரும் வழியிலேயே மான் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து வனச்சரகர் தண்டபாணி கூறியது:

இந்த மான் ஒரே இடத்தில் இருக்காமல் அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் வகையை சேர்ந்தது. பருவமழை இல்லாததாலும், கடும் கோடை வெயிலாலும் வனப் பகுதியில் வன விலங்குகள் குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கரூரை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்திருக்கலாம். அப்போது நாய்கள் துரத்தியதில் இந்த குடோனுக்குள் வந்து மாட்டியுள்ளது என்று கூறினார்.

Related posts

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்