கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதை எதிர்த்து வழக்கு; உரிய அனுமதி இல்லாமல் கட்டுமானம் நடைபெறாது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உத்தரவாதம்


சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் திட்டத்தை எதிர்த்த வழக்கில், உரிய அனுமதி பெறாமல் எந்த கட்டுமானமும் நடைபெறாது, என்று அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில் ₹26.78 கோடி செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

₹88 கோடி மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம் ஆண்டுக்கு ₹10 கோடி வாடகை வருவாய் பாதிக்கப்படும். கோயில் நிதி ₹28 கோடியை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் ₹2 கோடியே 50 லட்சம் வட்டி வருவாய் பாதிக்கப்படும். அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோயில் நிலத்தில் கோயில் நிதியில் அமைக்க முடியாது. அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது. திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது. கலாச்சார மையம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை சட்டப்படி, கோயில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட்டு, ஆட்சேபங்கள் பெற வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் வாதிட்டார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அரசு அணுகியுள்ளது. உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது. தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய இந்த மையத்தில் கட்டப்படும் அரங்குகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கோயிலுக்கு வருவாய் வரும் என்றார். இதையடுத்து, சட்டப்படி கோயில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. கோயிலின் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும். இந்த கலாச்சார மையம் மூலமாக கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என்று விளக்கமளித்தார். அரசு தரப்பில் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்