காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே அறுந்து விழுந்த ரயில்வே மின்சார வயர்

* ரயில் போக்குவரத்து பாதிப்பு
* பயணிகள் கடும் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் அதிக மின் அழுத்தம் காரணமாக ரயில்வே மின்சார வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதுபார்க்கும் பணி சுமார் 3 மணி நேரம் நடந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம், புதிய ரயில் நிலையம் என 2 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து நாள் தோறும் பல்வேறு பணி நிமித்தமாக சென்னைக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு பயணிப்போர் என பல நூற்றுக்கணக்கானோர் ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த 2 ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பல நூற்றுக்கணக்கான ரயில்வே பயணிகள் நாள்தோறும் பயணித்து வருகின்ற நிலையில், நேற்று சுமார் 4 மணியளவில் பழைய ரயில்வே நிலையம் பகுதியில் உயர் மின்னழுத்த மின்சாரம் எடுத்து செல்லும் பீங்கான் உடைந்ததால் மின்சார ரயிலுக்கு செல்லும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு மின் வயர் துண்டானது. இதனால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்வயர் அறுந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஏதும் அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பேரி கார்டுகள் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் அடுத்த பாலூர் ரயில்வே நிலையத்தில் சென்னை கடற்கரையில் இருந்து வந்த மின்சார ரயில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மேலும், மாலை 5 மணிக்கு சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். உயர் மின்னழுத்தம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதால் மின் வயர்களை சீர்படுத்த குறைந்த பட்சம் 3 மணி நேரத்திற்கு மேலாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் செல்லும் 5 மணி மற்றும் 7:30 மணி ரயில்களும் மின் சப்ளை இல்லாத காரணத்தினால் இயங்கவில்லை.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்