மழைக்காலம் தொடங்கும் முன் வத்தலக்குண்டு கண்மாய்களை தூர்வார வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் உள்ள கண்மாய்களை மழைக்காலம் தொடங்கும் முன் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் 7,000 வீடுகள் உள்ளன. சுமார் 25,000 பேர் வசிக்கின்றனர். அதில் முக்கால்வாசி பகுதியினர் விவசாயிகளாகவும் விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர். வத்தலக்குண்டுவை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மஞ்சளாறு, வைகை ஆறு, மருதாநதி ஆகிய 3 ஆறுகள் செல்கின்றன.

வீரன்குளம், பெரிய கண்மாய், கன்னிமார் சமுத்திரம், ரங்கசமுத்திரம், திருச்சுழி ராமசாமி கண்மாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. வத்தலக்குண்டு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் அதிக அளவில் இருந்தது. வெற்றிலையில் வினோத நோய் ஏற்படவே அதன்பிறகு வெற்றிலை விவசாயம் நலிந்துபோனது. பழைய வத்தலக்குண்டு பகுதியில் ஒரு சிலர் மட்டும் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றிலைக்கு பிறகு விவசாயிகளுக்கு வெற்றியை கொடுத்தது வாழையும், நெல்லும்தான். வாழை விவசாயத்தில் வாழை இலை தொடர்ந்து வருமானம் கொடுப்பதால் விவசாயிகள் நாடு, ரஸ்தாலி, பூவன் போன்ற பல்வேறு வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வத்தலக்குண்டுவில் நெல் கொள்முதல் நிலையம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பிறகு நெல் விவசாயம் சற்று அதிகரித்து வருகிறது. வத்தலக்குண்டுவில் வாழை இலை, வாழைக்காய் போன்றவற்றை விற்க தனியார் மார்க்கெட்கள் உள்ளன. அங்கு சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாழைக்காய் மற்றும் வாழை இலைகளை ஏலம் எடுத்து லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

வத்தலக்குண்டு பகுதி விவசாயிகள் கொரோனா காலத்திலும் மூலையில் முடங்கிவிடாது இடைவிடாது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்தார்கள். சில நேரம் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றனர். நெல், வாழையோடு தக்காளி, பருத்தி, முருங்கை, அவரை, வெங்காயம் போன்ற விவசாயங்களும் நடந்து வருகிறது. தக்காளி, வெங்காயம் நல்ல விலை விற்பதால் விவசாயிகள் அவற்றை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சில கண்மாய்களில் கால்வாசி தண்ணீர் உள்ளது. சில கண்மாய்கள் முற்றிலும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. மாணவர்கள் கண்மாய்களில் கிரிக்கெட் விளையாடும் நிலை உள்ளது. வத்தலக்குண்டு பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தேனி மாவட்டம் தேவதானப்பட்டியிலுள்ள மஞ்சளாறு அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. சில கண்மாய்களுக்கு அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே ஏராளமான விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்ய தயாராக உள்ளனர். நெல் போன்ற விவசாயத்திற்கு தண்ணீர் அதிக அளவு தேவைப்படும்.

கண்மாயில் பாதிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் நெல் விவசாயத்தை நம்பி தைரியமாக செய்ய முடியும். ஆகையால் அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கு முன்பாக கண்மாயை தூர்வார வேண்டும். பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் கண்மாய்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்கும் அளவு குறைந்துவிடும். எனவே தண்ணீர் கண்மாயில் இல்லாத நேரத்தில் தூர்வார வேண்டும்.

விருவீடு பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. அப்பகுதியில் முருங்கை, அவரை போன்ற விவசாயங்கள் அதிக அளவில் நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலர் மீன் வளர்க்கும் பண்ணையை தங்களது தோட்டத்தில் செயல்படுத்தி வருகின்றனர். அத்தொழிலுக்கும் அதிகளவு தண்ணீர் தேவையாக உள்ளது. மழைக்காலங்களில் அணைகள் நிறையும்போது கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பே கண்மாய்களை தூர்வார வேண்டும். சில கண்மாய்களில் மதகுகள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூகஆர்வலர் தங்கப்பாண்டி கூறுகையில், இன்று வத்தலக்குண்டு பகுதியில் பெரும்பாலானோரை வாழ வைத்துக் கொண்டிருப்பது வாழைதான். வாழையில் வாழைக்காய், இலை, தண்டு, பூ ஆகிய அனைத்தும் மக்களுக்கு பயன்படுகிறது. காய்ந்த வாழை மட்டை கூட பூ கட்ட நாராக பயன்படுகிறது. அனைத்து வகையிலும் பயன்படும் வாழை, விவசாயிகளின் வாழ்வுக்கு நங்கூரமாக இருக்கிறது. அத்தகைய வாழைக்கு வருடமெல்லாம் தண்ணீர் வேண்டும். அப்படியானால் உடனடியாக கண்மாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றார்.

Related posts

புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி