களக்காட்டில் மின் சப்ளை குறைபாட்டால் பயன்பாட்டுக்கு வராத உறைகிணறு : தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

களக்காடு : களக்காட்டில் பணிகள் முடிவடைந்த பின்னரும் மின் சப்ளை குறைபாட்டால், உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். களக்காடு நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர நகராட்சி சார்பில் வடகரை பச்சையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் போதியளவு வழங்கப்படாததால் களக்காட்டில் அடிக்கடி குடிநீர் விநியோகம் தடைபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. சீரான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வண்ணாந்துறை ஓடையில் அமைக்கப்பட்ட உறை கிணறும் தூர்ந்து போனதால் அங்கிருந்து தண்ணீர் சப்ளை செய்வதும் தடைபட்டுள்ளது. கோடை காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கூட தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனைதொடர்ந்து களக்காடு நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து களக்காடு நகராட்சி சார்பில், சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ள இலவடி அணை அருகே புதியதாக உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது உறை கிணறு அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. கிணற்றில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல உறை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணிகளும், மின் இணைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் முடிவடைந்து, கிணற்றில் இருந்து நீர் எடுத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இன்னும் உறை கிணறு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உறை கிணறுக்கு வழங்கப்பட்டுள்ள மின் சப்ளை குறைபாட்டால் உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுபாடு தொடர்ந்து வருகிறது.

வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் களக்காடு நகராட்சி பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்கலாம் என்றும், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மின்சப்ளை குறைபாட்டை சீர்படுத்தி, உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…