ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 4வது முறையாக இந்தியா சாம்பியன்: பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்

சலாலா: ஜூனியர் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தது. ஓமனில் உள்ள சலாலா நகரில் ஆண்களுக்கான 9வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், தைவான், ஓமன், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் என 10 நாடுகள் பங்கேற்றன. இத்தொடரின் பைனலில் விளையாட நடப்பு சாம்பியன் இந்தியா 6வது முறையாகவும், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் 7வது முறையாகவும் தகுதி பெற்றன. பைனலில் வெற்றி யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவியது.

முதல் பாதியில் இந்தியாவின் அங்கத் சிங் 13வது நிமிடத்திலும், அரய்ஜீத் சிங் 20 நிமிடத்திலும் கோலடித்தனர். இடைவேளையின்போது இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது.
2வது பாதியில் பாக். வீரர் அப்துல் பஷரத் (38வது நிமிடம்) கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா தொடர்ந்து 2வது முறையாக பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. 4வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

* ரொக்க பரிசு
ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு தலா ரூ. 2லட்சம், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணி அலுவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

Related posts

வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார் கவுன்சில் வழங்கிய ஸ்டிக்கரை அனுமதிக்க கோரிக்கை

ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல்