ஜோலார்பேட்டை அருகே பயணத்தின்போது ரயிலில் தவறி விழுந்த போதை வாலிபரின் 2 கால், ஒரு கை துண்டானது

*மருத்துவமனையில் சிகிச்சை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரயிலில் பயணம் செய்த போதை வாலிபர் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி 2 கால் மற்றும் ஒரு கை துண்டாகி சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் கார்த்திக்(21). இவர் ஐதராபாத்தில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார்.

பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 9 மணிக்கு வந்ததும் ரயிலில் ஏறி பொது பெட்டியில் பயணம் செய்துள்ளார். ரயில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி ஒரு கை, இரண்டு கால்கள் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் விழுந்து கிடந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்