ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது. தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள குளறுபடிகள், குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் 19ம் தேதி நடக்க இருப்பதை அடுத்து, தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஆனால் தபால் வாக்குகளை செலுத்துவதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அதை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளளர்கள் வெங்கடேசன், தியாகராஜன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து அது குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது தேர்தல் ஆணையரிடம் மனுவும் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடக்க இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 19ம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருப்பதை தொடர்ந்து தேர்தல் வாக்குப் பதிவுப் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளை செலுத்துவதில் கடும் சுணக்கமும், குளறுபடிகளும் இருப்பதை தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்ெகாண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் பணிச் சான்று மற்றும் தபால் வாக்குகளை பதிவிடுவதற்கான அனைத்துநடவடிக்கைகளையும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , தேர்தல் பணிக்கு செல்லும் முன்பாக,

போலீசாருக்கு செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு போல 17ம் தேதி சிறப்பு ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் செய்து, அவர்களின் வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் விதமாக உரிய அனுமதியை அளித்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் தபால் வாக்குகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது