சனாதான விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி


சென்னை: இந்து சமய அறநிலைய துறை சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைய துறை சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடன் கூறியதாவது: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது, ஒரே நாளில் 6 வைணவ கோயில்களில் காலையில் தொடங்கி மாலை 6 மணிக்குள் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு பிரசாதங்களும், மதிய உணவும் வழங்கப்படுகின்றது.

இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 பயண திட்டங்களாகவும், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆடி மாதத்தில் ஒரே நாளில் 6 அம்மன் கோயில்கள், 8 கோயில்கள் என இருபிரிவாக பிரித்து அம்மனை தரிசிப்பதற்கு இதேபோன்று ஒரு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது மகிழ்ச்சியை தருகிறது. மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு 5 சிவாலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல நவராத்திரியை முன்னிட்டு ஒரே இடத்தில் பிரசித்தி பெற்ற 9 அம்மன்களை தரிசனம் செய்யக்கூடிய அளவில் ஒரு நிகழ்ச்சியினை நவராத்திரி விழாவாக ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். அந்த நிகழ்விலே கொலுவும் அமைக்கப்பட இருக்கிறது.

இப்படி பக்தர்களுடைய தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்களை இந்து சமய அறநிலைத்துறை செயல்படுத்தி வருகிறது. இன்றைய சுற்றுலாவில் 62 நபர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு 34 நபர்களும், 2வது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில், பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர், வைத்திய வீர ராகவபெருமாள் கோயில், பெரும்புதூர்,

ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி, வரதராஜ பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு 28 நபர்களும் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோயில் பிரசாதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் கூறினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ. முரளீதரன், இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை துணை ஆணையர்/செயல் அலுவலர் சி.நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்