சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளில் பொது மக்கள் பார்வைபடாத இடத்தில் மதுபானம் விநியோகம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக மார்ச் 14ல் திருத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த அறிவிப்பாணையின்படி, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் தனி இடத்தில் தான் மதுபானம் வினியோகிக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த பகுதியை தவிர வேறு இடங்களில் வினியோகிக்க கூடாது. அந்த இடங்களை பொதுமக்கள் பார்க்காத வகையில் மறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு மனுதார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, இது பொது இடங்களில் மதுபானம் அருந்துவது குற்றம் என்ற மதுவிலக்கு சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. எனவே, இந்த திருத்த அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

Related posts

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக..!!

கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள செட்டிகுளத்தில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்