இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கியோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன. 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது கூட தெரியாதா?. புரிந்து தான் பேசுகிறாரா? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை. தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார்.

இந்த தேர்தல் இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? பிரச்னை. இந்தியாவின் எதிர்காலமே நாடாளுமன்ற தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பாஜகவை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019ல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024ல் மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சைனீஸ் முதல் பர்மீஸ் வரை… பட்ஜெட் விலையில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்!

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!

சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு