இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு இழுத்து செல்லும் மோடி: ப.சிதம்பரம் ‘பளார்.. பளார்…’

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சாக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். அதில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 2019ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 2024ல் நடக்கிறது. மீண்டும் பாஜவும், மோடியும் ஆட்சியமைத்தால் 2029ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்காது. நாட்டை சர்வாதிகார பாதையில் அழைத்து செல்கின்றனர். மாநில அரசுகளை அச்சுறுத்தி, அதிகாரங்களை பறித்து அரசியல் சாசனத்தை திருத்த பார்க்கின்றனர். ஒரு நாடு ஒரு கட்சி, ஒரு நாடு ஒரு தலைவர், ஒரு நாடு ஒரு பிரதமர் என்ற திசையில்தான் நாடு போய்க் கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வரை ஒன்றிய அரசு கைது செய்ய முடியும் என்று யாரும் நினைத்தது கூட கிடையாது. எந்த காலத்திலும் ஒன்றிய அரசு, முதல்வரை கைது செய்தது இல்லை.

தற்போது இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். கெஜ்ரிவால் கைது என்பது அனைத்து முதல்வர்களுக்கும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மோடி சொன்ன வாக்குறுதியை எதுவும் நிறைவேற்றவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத அரசு, வேலையில்லா திண்டாட்டத்தை தணிக்க முடியாத அரசு எதற்காக நாற்காலியில் அமர வேண்டும். உங்களால் முடியாவிட்டால் வெளியே செல்லுங்கள். நாட்டில் ஜனநாயகம் காப்பற்ற வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

* பூவை ஜெகன்மூர்த்தி பாஜ கூட்டணியில் விரைவில் இணைவார்: ஏ.சி.சண்முகம் ‘திடீர் குண்டு’
வேலூர் மக்களவை தொகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகக் கூட்டம் நடந்தது. அப்போது, ஏ.சி.சண்முகம் பேசுகையில், ‘புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி நம்முடைய கூட்டணியில் விரைவில் இணைய போகிறார்’ என நம்பிக்கையுடன் பேசினார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜெகன்மூர்த்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு எம்பி சீட் தரவில்லை என ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணி சார்பில் நடந்து வரும் வேட்பாளர் பிரசாரம் உட்பட அதிமுக கூட்டணி தேர்தல் பணிகள் எதிலும் புரட்சி பாரதம் கட்சியினர் யாரும் கலந்து கொள்வதில்லை. தங்களது ஆதரவு குறித்து ஜெகன்மூர்த்தி எந்த முடிவையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், ஏ.சி.சண்முகம் தங்களது கூட்டணிக்கு ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வருவார் என பேசியது அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ எங்களுக்கு உதவி இருந்தால் எடப்பாடியை ஊதி தள்ளிருப்பேன்: டிடிவி.தினகரன் ஆவேசம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருக்காக வேண்டி அதிமுக ஆட்சியை தொடர்வதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர் ஆட்சியில் அமர்ந்ததும் எங்களைச் சார்ந்தவர்களையும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரையும் அதிமுகவில் இருந்து நீக்கினார். அந்த சமயத்தில் எனக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அப்போதைய தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது எங்களுக்கு பாஜ உதவி செய்யவில்லை. மாறாக எங்களுக்கு உதவி இருந்தால் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் ஊதி தள்ளி இருப்பேன்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமியிடம் சேராமல் இருந்திருந்தால் இன்று எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடம் தெரியாமல் போய் இருப்பார். ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தையே அவர் நிராயுதபாணியாக மாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமி, பாஜவிற்கும் விசுவாசமாக இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் அரவணைத்துச் செல்லவில்லை. எடப்பாடி ஒரு அரக்கருக்கு நிகரானவர். அதே போல் அதிமுகவின் ஆணிவேர் என்பது யார்? கிளைகள் என்பது யார் என்பது இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

* பபூன் உதயகுமாரே அதிமுக பிரிய காரணம்
டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஒரு பபூன். அவரைப் போன்ற நபர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்வது கிடையாது. அதிமுக இன்று பல அணிகளாக பிரிவதற்கு ஆர்.பி.உதயக்குமார் என்ற பபூன் தான் காரணம். எனக்கு இந்த தேர்தலில் நிற்பதற்கு விருப்பமில்லை என்றாலும், தேனி மக்கள் என்னை விரும்பியதால் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,’என்றார்.

Related posts

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!