வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பலி: திருச்சியில் புத்தாண்டு நாளில் பரிதாபம்

திருவெறும்பூர்: திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவரான இவருக்கு, தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), பிரதீபா (12), ஹரிணி (10) என்ற மகள்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதில், பிரதீபா 6ம் வகுப்பும், ஹரிணி 5ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அவர் 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு ஹாலில் படுத்து தூங்கினர். அப்போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இதனை நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றினர். அப்போது 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். இதையடுத்து உடல்களை மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்