குமரியில் சூறைக்காற்று; 8 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் 4 படகுகள் கவிழ்ந்தன

நித்திரவிளை: சூறைக்காற்று காரணமாக குமரிமாவட்டத்தில் இரையுமன்துறை முதல் நீரோடி வரையுள்ள 8 கிராம மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்ல வில்லை. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன. குமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபிக்கடலில் சூறைக்காற்று வீசியதன் காரணமாக இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராமங்களில் உள்ள நாட்டு படகு, பைபர் படகு, கரமடி வள்ளம், கட்டுமரம் ஆகியவற்றில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று காலை முதல் மீன்பிடிக்க செல்லவில்லை.

படகுகளை தாமிரபரணி ஆறு மற்றும் ஏவிஎம் கால்வாயில் ஒதுக்கி நிறுத்தி வைத்திருந்தனர். அதேவேளையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இனையம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்று, மீன்பிடித்து விட்டு துறைமுகத்திற்குள் நுழையும் போது நுழைவாயிலில் காற்று காரணமாக ஏற்பட்ட அலையில் சிக்கி நான்கு பைபர் படகுகள் கவிழ்ந்தது. அதில் ஒரு பைபர் படகு இரண்டு துண்டானது. மூன்று படகுகள் தலைகுப்புற கவிழ்ந்தது. அதேவேளையில் இந்த படகில் இருந்த மீனவர்களில் ஒரு நபருக்கு மட்டும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற மீனவர்கள் அனைவரும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

குளச்சலில் கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
குளச்சல் : குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும்,1 000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். வள்ளம், கட்டுமரங்கள் அருகில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 1ம் தேதி முதல் 60 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது.

இதனால் கடந்த 26 நாட்களாக விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வழக்கம் போல் கட்டுமரங்கள் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்று காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு