புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் கொலை என வதந்தி பரப்பிய யூடியூபர் பாஜவில் ஐக்கியம்

புதுடெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்படுவதாக வதந்தியை ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபர் மனிஷ் காஷ்யப் நேற்று பாஜவில் சேர்ந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போலி வீடியோவை பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் மனிஷ் காஷ்யப்பை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனிஷ் காஷ்யப் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லி தொகுதி எம்பி மனோஜ் திவாரி முன்னிலையில் மனிஷ் காஷ்யப் நேற்று பாஜவில் இணைந்தார். அப்போது மனோஜ் திவாரி,‘‘மனிஷ் காஷ்யப் மக்களின் பிரச்னைகளை எழுப்பினார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தார். எதிர்க்காலத்தில் அவரது திறமையின் அடிப்படையில் அவருக்கு பதவி அளிக்கப்படும்’’ என்றார். 80 லட்சம் பாலோயர்களை கொண்ட யூடியூர் மனிஷ் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கடுமையாக விமர்சித்து வந்தார். வட கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கன்னையா குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிரான பிரசாரத்தில் மனிஷ் காஷ்யப்பை ஈடுபடுத்த பாஜ முடிவு செய்துள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்