சட்டவிரோதமாக செயல்படும் தீட்சிதர்கள்! பக்தர்கள் நலன்காக்கும் நடவடிக்கைகளில் இருந்து பின் வாங்க போவதில்லை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூடப்பட்டுள்ள திருக்கோயில்களை திறப்பதற்கு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், வேத ஆகம பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பிரபந்த விண்ணப்ப பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக மூடப்பட்டுள்ள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களை திறப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும், கருத்து வேறுபாடுகள் காரணமாக மூடப்பட்டுள்ள திருக்கோயில்களை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று, வருவாய் மற்றும் காவல்துறையினரோடு இணைந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டு மூடப்பட்டுள்ள திருக்கோயில்களை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் சங்கர், இ.ஆ.ப., திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேட்டுக்காக புதிய மொபைல் செயலியில் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையால் மூடப்பட்ட கோயில்களை மீண்டும் திறக்க இணை ஆணையர்கள் தலைமையில் ஆய்வு நடத்தி மீண்டும் திறக்க நவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தீட்சிதர்கள் பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்றும் எதுவெல்லாம் சட்ட விரோதமோ அதையெல்லாம் சிதம்பரம் கோயிலில் ஒருசில தீட்சிதர்கள் செய்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார். மேலும், நகை சரிபார்ப்புக்கு செல்லும் போது நீதிமன்றத்துக்கு செல்வதாக தீட்சிதர்கள் நிழல் பயம் காட்டி வருவதாக தெரிவித்த சேகர்பாபு சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்தார்.

Related posts

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

தேனி மாவட்ட முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கோயில் திருவிழாவில் ஆதார் கார்டுடன் அம்மனுக்கு பேனர்: நிலக்கோட்டை அருகே சுவாரஸ்யம்