ஐஎப்எஸ் நிதி நிறுவனம் பலகோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை தயவு செய்து திரும்ப தந்துவிடுங்கள்: தற்கொலை செய்து கொண்ட வாலிபர் உருக்கமான கடிதம்

குடியாத்தம்: ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ₹26 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தந்துவிடுங்கள் என ெதரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ் (இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்) நிதி நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு மாதந்தோறும் 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியது. இதனால் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இதன் மூலம் ₹6 ஆயிரம் கோடி வரை வசூலித்த அந்நிறுவனம் தாங்கள் தெரிவித்தபடி பணத்தை தராமல் மோசடி செய்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐஎப்எஸ் நிறுவன இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குடியாத்தம் அடுத்த கல்லேரியை சேர்ந்த பிரசாத்(39) என்பவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் கரும்பூர் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் ஏஜென்ட் வெங்கடேசன் மூலம் ₹26 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். இதற்காக நண்பர்கள் உள்ளிட்டோரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த பிரசாத் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலை செய்வதற்கு முன்னதாக பிரசாத் அவரது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘என் அன்பான மனைவிக்கு, நான் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறிய காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய கரும்பூரை சேர்ந்த வெங்கடேசனிடம் ₹26 லட்சம் கொடுத்து ஏமாந்துவிட்டேன். அவர் ஐஎப்எஸ் நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்படுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நான் கடன் பெற்று அதிக வட்டிக்கு அவரிடம் முதலீடு செய்தேன். கடன் கொடுத்தோர் பணத்தை திரும்ப கேட்க என்னால் கொடுக்க முடியவில்லை.

நான் தனிப்பட்ட முறையில் ₹12 லட்சத்துக்கு மேல் வட்டி கொடுத்துவிட்டு, அதிக கடன் சுமையில் நானே மாட்டிக்கொண்டேன். என் சாவுக்கு காரணம் ஐஎப்எஸ் நிறுவனம். தயவு செய்து இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரிடம் உரிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பிரசாத்’ என்று எழுதியுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்