போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த திருமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அருகே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும். போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், போதைப்பொருளை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர், ‘‘போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

இருப்பினும் போலீசார் கூடுதல் விழிப்புடன் உரிய நடவடிக்கை எடுத்தால், போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழக தலைமைச் செயலர், தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட ரகசியக் குழுவை அமைத்து, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு துணை ேபாவதாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினரை, சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு