பாஜ கூட்டணி கட்சி ஆதரவாளர் வீட்டில் ரூ.3.68 கோடி பறிமுதல்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்

* 6 நாய்கள் கட்டி வைக்கப்பட்ட இடத்தில் சாக்கு மூட்டையில் பதுக்கல், ரூ. 1.10 கோடி செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் சிக்கியது

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் ஜான்சி நகரில் ஒரு கட்சிக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு பொதுமக்கள் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஸ்வந்தையா தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், நெல்லித்தோப்பு ஜான்சி நகர் பகுதியில் நிதிநிறுவன உரிமையாளரும், பாஜ கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளரும், முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவருமான முருகசேன் என்பவரது வீட்டில் உள்ளே நுழைந்தனர்.

அப்போது, அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் 6 நாய்களும், அதிகாரிகளை உள்ளே விடாமல் குரைத்து பயமுறுத்தியது. வீட்டில் இருந்தவர்கள் நாயை பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தியபோது, பணம் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து நாய்களை கட்டி வைக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்துபோது, 2 சாக்கு மூட்டைகள் கிடந்தது. இதனை பிரித்து பார்த்தபோது, கட்டுக் கட்டாக பணம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்த பணம் 10 லட்சத்துக்கு மேல் இருந்ததால், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பிடிபட்ட பணத்தை கணக்கிட்டனர். இதில் ரூ.3 கோடியே 68 லட்சம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ரூ.1.10 கோடி மதிப்பிலான புழக்கத்தில் இல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்துள்ளன.

நிதி நிறுவன அதிபர் முருகேசன் சோதனையின்போது வீட்டில் இல்லை, அவர் வெளியூர் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பணம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் குறித்து முருகேசனின் மனைவி, மகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Related posts

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

‘ஏழைகளுக்கான திட்டங்களால் மோடிக்கு வயிற்றெரிச்சல்’: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்