‘சேலையை உருவி மானபங்கம்’ வீடு புகுந்து பாஜ பெண் நிர்வாகி மண்டை உடைப்பு: மற்றொரு நிர்வாகி மீது வழக்கு

தஞ்சை: வீடு புகுந்து பாஜ பெண் நிர்வாகியின் மண்டையை உடைத்தது தொடர்பாக மற்றொரு பெண் நிர்வாகி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மந்திரி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(40). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ செயலாளராக உள்ளார்.

தஞ்சை பூக்கார தெருவில் வசிப்பவர் கவிதா(39). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ மகளிரணி தலைவி. இந்த 2 பெண் நிர்வாகிகளுக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கவிதா ஒரு வாலிபர் உள்பட அடையாளம் தெரியாத 4 பேருடன் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த ஜெகதீஸ்வரியை சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர்.

பின்னர் ஜெகதீஸ்வரியின் சேலையை உருவி மானபங்கப்படுத்தியதோடு அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த அவரை அவரது கணவர், தஞ்சை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று இரவு ஜெகதீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் கவிதா உள்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக பெண் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட இந்த மோதல் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி