ஹோம் பேக்கர் டூ கஃபே ஓனர்!

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் இருக்கிறது ‘பேஸ்ட்ரீ மேனியா’ என்கிற கஃபே. விதவிதமான கேக்குகள் முதல் பாஸ்தா, பீட்சா என பலவகையான உணவுகளை கொடுத்துவரும் இந்த கஃபே அந்தப் பகுதியின் ஃபுட் ஸ்பாட்டாக இருக்கிறது. பார்த்தவுடன் பிடித்துப்போகிற இன்டீரியர் கலர், சுவைக்கத் தூண்டும் பல வண்ணக் கேக்குகள், குடிக்கத்தூண்டும் மில்க் சேக்ஸ் என ஒவ்வொன்றுமே ஸ்பெஷல்தான். கல்லூரி மாணவர்கள் முதல் குட்டீஸ் வரை அனைவருக்கும் பிடித்த இந்த கஃபேயின் உரிமையாளர் மோனிஷா அவர்களை சந்தித்தோம். உங்களைப் பற்றியும் உங்களது கஃபே பற்றியும் சொல்லுங்களேன் எனக் கேட்டதும் சிரித்தபடியே பேசத்தொடங்கினார் மோனிஷா. பிறந்தது வளர்ந்தது என எல்லாமே சென்னைதான். எனக்குச் சிறுவயதில் இருந்தே கேக் செய்வதில் அதிக ஆர்வம். எப்படியாவது கேக் மேக்கிங் செய்து நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் கேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து நானே வீட்டில் இருந்தபடி கேக் மேக்கிங் செய்வதற்கு கற்றுக் கொண்டேன். கேக் செய்வதற்காக எந்த வகுப்பும் போகவில்லை. புத்தகத்தைப் படித்தும் வீடியோஸ் பாத்தும்தான் கேக் எப்படி செய்ய வேண்டும் எனக் கத்துக்கிட்டேன்.

முதன்முதலில் வீட்டிலே கேக் செய்து எனது நண்பர்களுக்கு கொடுத்தேன். அனைவருக்குமே நான் செய்த கேக் பிடித்துப்போனது. வீட்டில் உள்ளவர்களுக்கும் எனது கேக் மிகவும் பிடித்துப்போகவே கேக் செய்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் இந்தத் தொழிலை தொடங்குவதற்காக அம்மாவிடம் ஐந்தாயிரம் வாங்கினேன். அதுதான் எனது தொழிலுக்கு அடித்தளம். கல்லூரி படிக்கும்போதே வீட்டில் இருந்தபடி கேக் ஆர்டர்ஸ் வாங்கி விற்பனை செய்வது, கல்லூரியில் நண்பர்கள் கேக் கேட்டார்கள் என்றால் அவர்களுக்கும் கேக் சேல்ஸ் செய்வது என தொடர்ந்து எனது கேக் மேக்கிங் தொழிலை அடுத்த அளவிற்கு எடுத்துச் சென்றேன். பர்த்டே கேக்ஸ், திருமணநாள் வாழ்த்து கேக், குழந்தைகளை கவரும் டாய்ஸ் கேக் என இன்னும் பல வகையான கேக்குகள் செய்ய ஆரம்பித்தேன். எந்த புது கேக் செய்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிடச் சொல்லிக் கொடுத்து அவர்களின் அபிப்ராயங்களையும் தெரிந்து கொள்வேன். கல்லூரிப் படிப்பு ஒரு பக்கம் ஹோம் பேக்கிங் ஸ்டைலில் வீட்டில் இருந்தபடி கேக் செய்து டெலிவரி செய்வது ஒரு பக்கம் என எப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருந்தேன். அந்த நேரம்தான் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது.

இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்வதா அல்லது நமக்குத் தெரிந்த தொழிலான கேக் செய்து விற்பனை செய்யலாமா என யோசித்தேன். கடைசியில் சொந்தமாக நமக்குத் தெரிந்த வேலையை பார்க்கலாம் என முடிவு செய்தேன். அப்போது இருந்து இப்போது வரை இந்த கேக் மேக்கிங் தான் எனது தொழில்.பத்து வருடங்களாக எனக்குப் பிடித்த தொழிலை செய்து வருகிறேன். முதலில் வீட்டில் இருந்தபடி செய்து வந்தேன். அதன்பிறகு, தனியாக கிளவுட் கிட்சன் தயார் செய்து அங்கிருந்து கேக் மேக்கிங் அன்ட் கேக் டெலிவரி செய்து வந்தேன். இப்போது தனியாக கீழ்ப்பாக்கத்தில் கஃபே ஒன்று நடத்தி வருகிறேன். கேக் டெலிவரி செய்யும்போது வாரத்திற்கு ஒருமுறை பாஸ்தா செய்து விற்பனை செய்தேன். வாடிக்கையாளர்களிடம் பாஸ்தாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து பாஸ்தா பீட்சா என தொடர்ந்து கொடுத்து வந்தேன். அனைவருக்குமே நான் செய்கிற உணவுகள் பிடித்துப்போகவே கேக்ஸ் மற்றும் கஃபே உணவுகள் என இன்னும் நிறைய உணவுகள் சேர்ந்து இந்த கஃபேயைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவாறு அவர்கள் விரும்பும் சுவையில் அனைத்து உணவுகளுமே கொடுத்து வருகிறோம். அதுபோக, நமது கஃபேயில் ட்ரண்டிங்கில் இருக்கும் எல்லா வகையான கேக்குகளுமே கிடைக்கும். சமீபத்தில் நடிகை அலியா பட்டிற்கு லண்டனில் கிடைக்கும் மில்க் கேக் பிடிக்கும் என அதே சுவையான மில்க் கேக் தமிழகத்திலும் ட்ரண்ட் ஆனது.

அந்த மில்க் கேக்கும் நமது கஃபேயில் கிடைக்கும். அதேபோல, அரேபியன் கேக்ஸ் எல்லாமே கிடைக்கும். பலருக்கு பிடித்த ஜார் கேக்ஸ் இங்கு ஃபேமஸ். தனித்துவமான சுவையில் கேக் தயாரித்து அதனை காஃபி கப்பில் ஃப்ரீஸ் செய்து கொடுப்போம். அந்த கேக் பலரும் விரும்பும் கேக். அதேபோல பாஸ்தா, பீட்சா என இன்னும் பல வகையான உணவுகள் இருக்கின்றது. கஃபேயில் சூப்பில் இருந்து கேக்ஸ் வரை அனைத்துமே இருக்கிறது. மஸ்ரூம் சூப், டொமேட்டோ பசில் சூப், கிரீம் ஆஃப் சிக்கன் சூப் என இன்னும் பல வகையான சூப் இருக்கிறது. அதேபோல, ஸ்டார்டர்ஸில் வெஜ் அன்ட் நான்வெஜ் இருக்கிறது. வெஜ்ஜில் கார்ன் அன்ட் சீஸ் பால், பெரி பெரி மஸ்ரூம், கிரிஸ்பி லோடஸ் ஸ்டெம், ஃப்ரைடு பனீர், கிரீமி மஸ்ரூம் என இன்னும் பல வெரைட்டிகள் இருக்கிறது. நான்வெஜ் ஸ்டார்டர்ஸில் டைனமிக் சிக்கன், பெரி பெரி சிக்கன், சிக்கன் விங்ஸ், கொரியன் ப்ரைடு சிக்கன், பட்டர் கார்லிக் சிக்கன் என பல வெரைட்டிகள் இருக்கிறது.

மெயின் கோர்ஸில் பாஸ்தா, பீட்சா இருக்கிறது. எங்கள் உணவகத்தில் கிடைக்கக்கூடிய பாஸ்தாக்கள் அனைத்துமே ஸ்பெஷலானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே எங்கள் உணவகத்தின் பாஸ்தாக்கள் பிடிக்கும். அதேபோல, அவர்கள் விரும்பும் சுவையிலும் செய்து கொடுக்கிறோம். வெஜ் பிங் சாஸ் பாஸ்தா, சிக்கன் கிரீம் அல்ப்ரிடோ பாஸ்தா, சிக்கன் பிங் சாஸ் பாஸ்தா என பல வகையான பாஸ்தாக்கள் இருக்கிறது. பீட்சாவிலுமே வெஜ் அன்ட் நான்வெஜ் பீட்சாக்கள் இருக்கிறது. இதுபோக, மில்க் சேக்கிலும் பல வெரைட்டி இருக்கிறது. லெமன் ஐஸ் டீ, கிளாசிக் மொஜிட்டோ, ப்ரூட் மொஜிட்டோ என ட்ரிங்ஸிலும் வெரைட்டி இருக்கிறது. எனது உணவகத்தைப் பொறுத்தவரை இங்கு கிடைக்கும் எல்லா உணவுகளுக்குமே நான் ஒரு கஸ்டமர் மாதிரி தான் என்னை நினைத்துக் கொள்வேன். எனக்குப் பிடித்த உணவுகள் அதாவது கஸ்டமருக்கு பிடித்த உணவுகளைத்தான் எங்களது உணவகத்தில் தயார் செய்கிறோம். பல உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்கிறோம். அங்கு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட விரும்புகிறோமோ அதைத்தான் எனது உணவகத்திலும் கொடுக்க நினைக்கிறேன். கொடுத்தும் வருகிறேன். அந்த வகையில் நல்ல உணவுகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும். அதுமட்டும்தான் எனது ஆசை என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் மோனிஷா.

ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்