மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமை காவலர் புகார்: மருத்துவ கல்வி இயக்குனரகம் விசாரிக்க பரிந்துரை

பெரம்பூர்: அரசு மருத்துவமனையில் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், தலைமை காவலர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம் விசாரிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது 10 வயது மகள் பிரதிக்சா, சிறுநீரக பிரச்னை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார். மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌சாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிக்சாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தலலமை காவலர் கோதண்டபாணி தலைமைச் செயலக வாசலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் தலைமைச் செயலகம் வெளியே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோதண்டபாணி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் மனு அளித்தார். அதில், எனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மீது வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். 2 மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட வேண்டும். குழந்தையின் மருத்துவ அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக நேற்று முன்தினம் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், தலைமைக் காவலர் கோதண்டபாணியை நேரில் அழைத்து அவரிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சரி பார்த்து விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில் குறிப்பிட்ட அந்த புகாரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகம் விசாரிக்க அவர் பரிந்துரை செய்துள்ளார். தலைமைக் காவலர் கோதண்டபாணியின் புகார் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட புகார் என்பதால், துறை ரீதியிலான விசாரணை நடத்தும்படியும், அதன் அறிக்கையை தரும்படியும் துணை கமிஷனர் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது