அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்; நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை: நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு இன்று அதிகாலை 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத அமாவாசையன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மார்கழி மாத அமாவாசையையொட்டி அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கடும் பனியையும் பொருட் படுத்தாமல் நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் 3 தரிசன வாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக பக்தர்கள் சென்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண வண்ண மலர்களை கொண்டு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை கோயில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் எதிரே உள்ள ராமபிரானுக்கு மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு வாடாமல்லி, கிரேந்தி, போன்ற மணமில்லத மலர்கள் தவிர்த்து ரோஜா, மல்லிகை, துளசி அரளிப்பூ, கொழுந்து உள்பட்ட மணம்வீசும் மலர்களால் கழுத்து பகுதி வரை புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த காட்சியை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

இரவு 11.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இங்குவந்த பக்தர்களுக்கு ஒருலட்சத்துக்கு மேல் லட்டு, தட்டுவடை, சந்தனம், குங்குமம், திருநீறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல் பகல் 11 மணி முதல் இரவு வரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்