17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு வாழ்த்துக்கள் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை :கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் டொரோண்டோ நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடரில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார்.  இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் குகேஷ் வெல்ல வாழ்த்துக்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!