அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் பத்திரிகை, ஊடகங்களை பாஜ அரசு முடக்குகிறது: வைகோ கண்டனம்

சென்னை: பாஜ அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் பத்திரிகை, ஊடகங்களை பாஜ அரசு முடக்குகிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஒன்றிய அரசால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாகி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு தாக்குதலை தொடுத்துள்ளது . டெல்லியில் நியூஸ் க்ளிக் இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது.

இந்நிலையில், நியூஸ் க்ளிக் இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்துள்ளது. அதோடு பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி இல்லத்திலும் டெல்லி காவல்துறை சோதனை நடத்தி இருக்கிறது. கடந்த மாதம் பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசின் தாக்குதல் நடந்தது. நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பத்திரிகை ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும் பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!