ஹான்ஸ் புகையிலைக்கு அரசு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எந்தவொரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஹான்ஸ் பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்ற வணிக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது நிறுவனம் ஹான்ஸ் என்ற புகையிலை பொருளை இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்கிறது.

இதற்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஹான்ஸ் தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறி பறிமுதல் செய்து அழித்து வருகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதை விற்பனை செய்வது சட்டபூர்வமானது என்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் இதற்கு பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹான்ஸ்சில் 1.8 சதவீதம் நிகோடின் கலந்துள்ளது. இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருளாகும். இதை அனுமதிக்க முடியாது. புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொது மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தடை செய்வதற்கு அரசு அதிகாரம் இருந்தாலும் தடை விதிக்கும் முன்பு உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், தொழில் அல்லது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், அந்த உரிமையானது அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

பொது சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், குடிமகனின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. எந்தவொரு புகையிலை தயாரிப்பு பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால் அரசு தடை விதிப்பது நியாயமானதுதான். எனவே ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

போலி பேச்சு, பொய்யான வாக்குறுதி; 3ம் கட்ட தேர்தலிலும் பாஜ தூக்கி வீசப்படும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

காங்கிரஸ் நிர்வாகி படுகொலை சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்