கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு 86,380 டிஎம்சி தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது முதல் மீண்டும் காவிரி நீர் விஷயத்தில் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை அந்த அரசோடு வாதாடி, போராடி வாங்காமல், ஒன்றிய நீர்வள துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் முதல்வர் கடிதம் எழுதுவது கண்டிக்கத்தக்கது.

மேலும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அதிலிருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டி கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரை பெற வேண்டியதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.

கர்நாடக மாநில நீர்பாசன துறையும், துணை முதல்வர் சிவக்குமார் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்ய ஆட்களை நியமித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக திமுக அரசு, கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் நில அளவை பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூருக்கு சென்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமாரிடம் பேசி, உடனடியாக ஜூன் மாதம் 9.190 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.240 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 45.950 டி.எம்.சி என மொத்தம் 86.380 டி.எம்.சி. தண்ணீரை விரைந்து பெற்று, தற்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெல் பயிரை காப்பாற்ற வேண்டும்.

Related posts

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் அதிகாரியான மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீஸ் அகாடமியில் நெகிழ்ச்சி

கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம்

நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்